“வதந்திகளை பரப்பியதற்காக உன்னைக் கைது செய்யவில்லை. உண்மையைப் பரப்பியதற்காக கைது செய்கிறேன்...’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி பத்திரிகையாளர் ஒருவரை போலீஸ் கைது செய்வதாகச் சித்திரிக்கும் ஆர்.கே.லக்ஷ்மன் கார்ட்டூன் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு வருகிறது. இப்போது இது பகிரப்படக் காரணம் `நியூஸ் கிளிக்' என்ற செய்தித்தளத்தின் ஆசிரியர் உட்பட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை, மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி போலீசார் கைது செய்திருப்பதுதான். பயங்கரவாதிகளையும் தேசவிரோதிகளையும் ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட UAPA எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இவர்களைக் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா' மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உட்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உறவுகள், உடைமைகளை இழந்து, எஞ்சிய உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.