“வதந்திகளை பரப்பியதற்காக உன்னைக் கைது செய்யவில்லை. உண்மையைப் பரப்பியதற்காக கைது செய்கிறேன்...’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி பத்திரிகையாளர் ஒருவரை போலீஸ் கைது செய்வதாகச் சித்திரிக்கும் ஆர்.கே.லக்ஷ்மன் கார்ட்டூன் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு வருகிறது. இப்போது இது பகிரப்படக் காரணம் `நியூஸ் கிளிக்' என்ற செய்தித்தளத்தின் ஆசிரியர் உட்பட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை, மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி போலீசார் கைது செய்திருப்பதுதான். பயங்கரவாதிகளையும் தேசவிரோதிகளையும் ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட UAPA எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இவர்களைக் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
‘சீனாவுக்கு ஆதரவான பிரசாரம் செய்து இந்தியாவைத் துண்டாட, சீனாவில் இருந்து முதலீடு பெற்றிருக்கிறார்கள்’ என்று பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டை முன்வைக்கும் டெல்லி போலீசார், தங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் ‘நியூஸ் கிளிக்’ இணையதளத்தில் வெளியான எந்தக் கட்டுரையையும் காட்டவில்லை. UAPA சட்டத்தின்கீழ் அவர்கள்மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும்கூட, எந்த பயங்கரவாத செயலிலும் அவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை.
இதில் மிக மோசமான செயலாக, `நியூஸ் கிளிக்’கில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி, அவர்களின் கைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அத்தனை பத்திரிகையாளர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி அச்சுறுத்துவது, நெருக்கடி நிலை காலத்தில்கூட நடந்ததில்லை.
அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் ஊடக நிறுவனம் என்பதால், மூன்று ஆண்டுகளாகவே இது மத்திய அரசின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. வருமான வரித்துறை, அமலாக்க துறை, டெல்லி போலீஸ் என்று எல்லோரும் சோதனை நடத்தி, வெறுங்கையுடன் திரும்பியதுதான் நடந்தது.
இந்தச் சூழ்நிலையில், ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு கம்பெனிக்கும் சீன அரசுக்கும் நெருக்கம் இருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸில் வெளியான கட்டுரையை, மத்திய அரசு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தக் கைது நடவடிக்கையை எடுத்திருக்கிறது. உண்மையில் அவர்கள் தவறு செய்திருந்தாலோ தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலோ மத்திய அரசு எடுக்கும் இந்த நடவடிக்கையை யாரும் குறை சொல்லப் போவதில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் பயங்கரவாதிகளாக அவர்களைச் சிறைக்குள் தள்ளியிருப்பது, ‘அரசை எதிர்த்து எழுதினால் இதுதான் கதி’ என்று மற்றவர்களையும் அச்சுறுத்தும் செயல்தான் என்பதில் சந்தேகமில்லை.
‘எந்த அளவுக்கு பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது’ என்று 180 நாடுகளை ஆய்வு செய்ததில் சென்ற ஆண்டு 150-ம் இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 161-வது இடத்துக்கு வீழ்ந்துவிட்டது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விமர்சகராகவும், மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருப்பவை பத்திரிகைகளே! இது பத்திரிகையாளர்கள் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்னை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
Comments 0