தீபாவளி என்றால் ஒரு நாள் கொண்டாட்டம் என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நம் வாழ்வைப் புதுப்பிக்கும் வழிபாட்டு முறை.
தீபாவளி என்றால் ஒரு நாள் கொண்டாட்டம் என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நம் வாழ்வைப் புதுப்பிக்கும் வழிபாட்டு முறை.
தீபாவளியை மையமாக வைத்து அதற்கு முன்னும் பின்னும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் அநேகம் உள்ளன. அவற்றை அறிந்து முறையாகக் கடைப்பிடித்து வழிபட்டால், வாழ்வில் சகல நலன்களும் சூழும். அற்புதமான அந்த வழிபாடுகளைத் தெரிந்துகொள்வோம்.
செல்வ சம்பத்துகள் தரும் துவாதசி - கோபூஜை!
ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று தீபாவளி கொண்டாடுவோம். அதற்கு `நரக சதுர்த்தசி’ என்று பெயர். அதற்கு முன்பு வரும் துவாதசி திதி மிகவும் முக்கியமானது. அந்த திதி கோமாதா வழிபாட்டுக்காக உருவானது. அந்த நாளில் நாம் செய்யும் கோபூஜை பல்வேறு பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.
கோபூஜை செய்ய இயலாதவர்கள் குறைந்த பட்சம் பசுக்கள் இருக்கும் கோசாலைகளுக்குச் சென்று அவற்றுக்கு ஆகாரம் கொடுத்து பூஜித்து வணங்கினால் நம் சகல பாவங்களும் நீங்கும்; தனம், தான்யம் முதலான சம்பத்துகள் வாழ்வில் சேரும் என்கின்றன ஞான நூல்கள்.
ஆயுளைப் பெருக்கும் யம தீபம்
அடுத்த நாள் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு, ‘யம தீபம்’ என்று பெயர். யமனை வழிபட வேண்டுமா என்று அச்சப்படத் தேவையில்லை. யம தீபம் ஏற்றி வழிபட்டால் மனச் சஞ்சலங்கள், யமபயம் ஆகியவை விலகும். இவ்வித அச்சங்களும் குழப்பங்களும் அகன்று விட்டாலே வாழ்வில் அனைத்தும் வெற்றியாகும்.
இந்த தீபத்தை ஏற்றி, வீட்டு வாசலில் வைக்க வேண்டும். வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உண்டோ, அந்த எண்ணிக்கையில் விளக்கு கள் ஏற்ற வேண்டும். இவ்வாறு விளக்கேற்றி யமனை நினைத்து வணங்கினால் வாழ்வில் அனைத்தும் நன்மையாக முடியும்; ஆயுள் பெருகும்!
மகாலட்சுமி வழிபாடு!
தீபாவளி அன்று வரிசையாக தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு நாம் ஏற்றும் தீப ஒளியும் பட்டாசு வெளிச்சமும் நம் பித்ருக்களுக்கு வழிகாட்டும். அதனால் அவர்கள் திருப்தி அடைகிறார்கள் என்கின்றன ஞான நூல்கள். அதற்காகத்தான் பட்டாசு வெடித்து மகிழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தீபாவளி நாளன்று மாலையில் மகாலட்சுமியை வழிபட வேண்டியது அவசியம். அன்று மாலையில் மகாலட்சுமியை வணங்கி வழிபட்டுப் புதுக்கணக்கு தொடங்கும் வழக்கம் வட இந்தியாவில் உள்ளது.
தீபாவளிக்குப் பிறகு வரும் துவிதியை திதி நாளை யம துவிதியை என்று சொல்வார்கள். வட இந்தியாவில் `பையாதுஜ்’ என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் அவரவர் சகோதர சகோதரிகளைச் சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக சகோதரர்கள், சகோதரிக்குப் பரிசுகள் வழங்கி மகிழ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செல்வச் செழிப்பு சேரும் என்பது நம்பிக்கை.
கடன்களைப் போக்கும் ஆகாச தீபம்
தீபாவளி அன்று முதல் ஒருமாத காலம்... அதாவது அடுத்த அமாவாசை திதி வரை மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த நாள்களில் காலை ஆறு மணிக்கு நீராடுவது அவசியம். இதனால், மனக் கவலைகள் அனைத்தும் நீங்கும்; மன உறுதியும் தேக ஆற்றலும் பெருகும் என்கின்றன ஞானநூல்கள்.
அதேபோல், இந்தக் காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு ஆகாச தீபம் ஏற்றுவது. தினமும் மாலை ஆறு மணிக்கு தீபம் ஏற்றி வைப்பதே இந்த வழிபாடு. இந்த தீபத்தில் மொத்தம் எட்டு திசைகளைக் குறிக்கும் வண்ணம் எட்டு திரிகள் இட வேண்டும். ஏற்றிய தீபத்தை வீட்டின் வாசலிலோ அல்லது மொட்டைமாடியிலே திறந்த வெளியில் வைக்க வேண்டும். ஆகாசத்தைப் பார்க்கும்படி தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு `ஆகாச தீபம்’ என்று பெயர். இவ்வாறு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கடன் பிரச்னைகள் தீரும். செல்வ வளம் சேரும்.
கடன் என்றால் செல்வம் சார்ந்த கடன் மட்டுமல்ல. ஜன்ம ஜன்மாந்திரங்களாகத் தொடரும் வினைகளாகிய கடனையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இரண்டு விதமான கடன்களும் கட்டாயம் அடைவதற்கு இந்த ஆகாச தீபம் உதவும் என்கிறார்கள் பெரியோர்கள். தீபாவளி நம் வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகை. அதை முறையாகக் கடைப்பிடித்தால் சகல துன்பங்களும் நீங்கி இன்பமாக வாழலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?
நல்லெண்ணெய்யில், மகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்துகிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள்.
‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், `கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் ‘தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.
தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களை ஏற்றுக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தவேண்டும் என்கின்றன ஞான நூல்கள். நற்குணங்களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்!
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0