தறிக்கெட்டு ஓடும் ஆம்னி பேருந்துகளின் வேகத்தைப்போல, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே பேருந்துக் கட்டணமும் மின்னல் வேகத்தில் எகிறிவிடுகிறது. முன்பெல்லாம் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பல தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து, அநியாயக் கட்டண வசூலில் ஈடுபட்டன. இப்போது அந்தத் தலைவலியே இல்லை. ‘கட்டணக் கொள்ளையைச் சரிசெய்கிறோம்’ என்கிற பெயரில், அரசாங்கமே கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு முழுச் சலுகையும் அளித்திருக்கிறது. ‘ஐயா அங்குச்சாமி நீ மகராசனா இருக்கணும்யா...’ என அரசுக்குக் கும்பிடு போட்டுவிட்டு, பகல் கொள்ளையைப் பட்டவர்த்தனமாக அரங்கேற்றுகின்றன பெரும்பாலான ஆம்னி பேருந்துகள்!
“நாங்களே வருஷத்துக்கு ஒரு முறைதான் சொந்த ஊருக்குப் போறோம். பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்கள் கடன் வாங்கித்தான் தீபாவளியைக் கொண்டாடுது. இந்தச் சூழல்ல, ஆம்னி பஸ் கட்டணத்தை ஆயிரக்கணக்குல அரசாங்கமே உயர்த்தியிருக்குறது எந்த வகையில நியாயம்... இந்த உயர்வால, ஒரு குடும்பம் மதுரைக்குப் போயிட்டுத் திரும்பி வர, குறைந்தபட்சம் 20,000 ரூபாய் ஆம்னி பேருந்துக்கே செலவுசெய்ய வேண்டியிருக்கு” எனப் புலம்புகிறார்கள் பொதுமக்கள். தீபாவளி நெருங்கும் சூழலில், உயர்த்தப்பட்டிருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்கள், பொதுமக்களை மிரட்டுகின்றன. என்னதான் நடக்கிறது ஆம்னி பேருந்து விவகாரத்தில்... விரிவாக விசாரித்தோம்.
சமீபத்தில், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதாக 118 ஆம்னி பேருந்துகளைச் சிறைப்பிடித்தது போக்குவரத்துத்துறை. அந்தப் பேருந்துகளை விடுவிக்கக் கோரியும், இனி சோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தியும் திடீர் பேருந்து ஸ்டிரைக்கை அறிவித்தன சில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள். ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தவர்களெல்லாம் பரிதவித்துப்போனார்கள். அரசைப் பணியவைக்கும் முயற்சியாக, பயணிகளைப் பணயக் கைதிகளாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கையாண்டதை யாருமே ரசிக்கவில்லை. “ஸ்டிரைக்கில் ஈடுபடுவது ஒருசில சங்கங்கள்தான். பெரும்பான்மை எண்ணிக்கையில் பேருந்து வைத்திருப்பவர்கள் யாரும் ஸ்டிரைக்கில் ஈடுபடவில்லை” எனச் சில போட்டி சங்கங்களிடமிருந்து அறிக்கை வந்தது. ஆனால், பாதிக்கப்பட்டது என்னவோ பொதுமக்கள்தான். இதைத் தொடர்ந்துதான், போக்குவரத்துத்துறை ஆணையர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட 118 ஆம்னி பேருந்துகளும் விடுவிக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்களை அரசே நிர்ணயித்து வெளியிட்டது. அதில்தான் சிக்கலே!
நம்மிடம் பேசிய பயணிகள் சிலர், “விடுமுறைக் காலங்களில், அனைத்து ரயில்களிலும் சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் பெரும் சாதனமாக இன்றளவிலும் இருப்பது பேருந்துகள்தான். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் 16,895 பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகப் போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. இவற்றில், நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் எஸ்.இ.டி.சி பேருந்துகளின் எண்ணிக்கை வெறும் 2,206-தான். ஒரு வரிசையில் ஐந்து இருக்கைகள் கொண்ட சாதாரண பேருந்துகளைத்தான் ‘சிறப்புப் பேருந்துகள்’ என அடைமொழியிட்டு நீண்ட தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்துகிறது அரசு. இதில், குழந்தைகள், வயதானவர்களை வைத்துக்கொண்டு பயணிப்பது ரொம்பவே சிரமம் என்பதால்தான், ஆம்னி பேருந்துகளை நோக்கி நகர்கிறார்கள் பொதுமக்கள். ஆனால், அங்கே கட்டணக் கொள்ளை தாண்டவமாடுகிறது. ஆம்னி பேருந்துகளுக்குக் கடிவாளம்போட வேண்டிய அரசே, கூடுதல் கட்டணம் நிர்ணயித்துக் கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையிலும் வேதனை.
அரசு குளிர்சாதன ஸ்லீப்பர் பேருந்தில், சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல அதிகபட்ச கட்டணம் 1,020 ரூபாய்தான். ஆனால், ஆம்னி பேருந்தில் 2,874 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருக்கிறது அரசு. சென்னையிலிருந்து நெல்லைக்கு 1,244 ரூபாயும், தூத்துக்குடிக்கு 1,205 ரூபாயும், மதுரைக்கு 920 ரூபாயும் அரசுப் பேருந்துகளில் கட்டணமாக இருக்கின்றன. அல்ட்ரா டீலக்ஸ் போன்ற செமி ஸ்லீப்பர் வகை அரசுப் பேருந்துகளின் கட்டணம் இதிலும் பாதிதான். ஆனால், ஆம்னி பேருந்துகளில் நெல்லைக்கு 3,266 ரூபாயும், தூத்துக்குடிக்கு 3,187 ரூபாயும், மதுரைக்கு 2,508 ரூபாயும், நாகர்கோவிலுக்கு 3,684 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அரசு நிர்ணயித்திருக்கும் இந்தக் கட்டணத்தின்படி பார்த்தால், நான்கு பேர்கொண்ட ஒரு குடும்பம் ஆம்னி பஸ்ஸில் நெல்லைக்குச் சென்று திரும்பி வர, 26,000 ரூபாய் செலவுசெய்யவேண்டியிருக்கும். பல நடுத்தரவர்க்கக் குடும்பங்களின் ஒரு மாத வீட்டுச் செலவை, ஒரு பயணச் செலவில் கொட்டச் சொல்லியிருக்கிறது அரசு. வசூலிக்கப்படும் கட்டணத்துக்கேற்ப ஆம்னி பேருந்துகளில் வசதிகளும் இருப்பதில்லை. பல ஆம்னி பேருந்துகளின் இருக்கைகள், அரசு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளின் இருக்கைகளை விட மோசமாகவே இருக்கின்றன.
எதிர்பார்த்தபடி டிக்கெட் விற்பனை இல்லையென்றால், பயணிகளுக்கு முன்னறிவிப்பு எதுவுமே செய்யாமல், திடீரென பேருந்தை ரத்து செய்துவிடுகின்றன சில ஆம்னி பேருந்து நிறுவனங்கள். மாற்றுப் பேருந்தையும் ஏற்பாடு செய்வதில்லை, பயணக் கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்கிறார்கள். பேருந்து வராது என்பது தெரியாமலேயே குடும்பம், குழந்தைகளுடன் நள்ளிரவில் மக்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.
கொள்ளையில் திளைக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களைப் பற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முறையான தளங்கள் எதுவுமே இல்லை. போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கவனத்துக்குப் புகார்களைக் கொண்டு சென்றாலும்கூட, ‘டிக்கெட் முன்பதிவு செய்த தளத்தின் வாடிக்கையாளர் பிரிவை அணுகுங்கள், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்துக்கு போன் செய்து கேளுங்கள்’ என்பதுதான் பதிலாக இருக்கிறது. சாலை மோசமாக இருந்தால், அது குறித்துப் புகாரளிக்க புதுச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் அரசாங்கம், ஆம்னி பேருந்துக் கொள்ளை குறித்து புகாரளிக்கவும் செயலியை உருவாக்க வேண்டும். அரசு கடிவாளம் போட்டு இறுக்கினால் மட்டுமே, இந்தக் கட்டணக் கொள்ளை நிறுத்தப்படும்” என்றனர்.
ஆம்னி பேருந்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிகளைக் குழுவாக அழைத்துச் செல்லும் Tourist Carrier வகையைச் சேர்ந்தவைதான். அவை Stage Carrier கிடையாது. டூரிஸ்ட் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் வரி, விதிமுறைகள்தான் ஆம்னி பேருந்துகளுக்கும் பொருந்தும். மதுரை டு சென்னை, சென்னை டு கோவை என்று குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிக் கட்டணம் வசூல் செய்ய எந்த அனுமதியும் கிடையாது. ஆனாலும், அப்படித்தான் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதை முறைப்படுத்த அரசிடம் சரியான சட்டமும் விதிமுறையும் இல்லாததால், ஆம்னி பேருந்துகள்மீது முறைப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. ‘பேருந்து ஓட்டுநர் சீருடை அணிவதில்லை, அதிக வேகத்தில் பேருந்து இயக்கப்படுகிறது’ என்றுதான் பெரும்பாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகாரளிக்க 18004256151 என்ற கட்டணமில்லாத புகார் எண்ணை அறிவித்திருக்கிறது அரசு. இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே பலரின் குமுறல்.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சிலர் பேசுகையில், “சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அளவுக்கு, அரசுத் தரப்பில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ‘16,000 பேருந்துகள் இயக்கப்படும்’ என அரசு சொன்னாலும், அவை பேருந்தின் எண்ணிக்கை அல்ல. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இயக்கப்படும் பேருந்து நடையின் அடிப்படையிலான கணக்கு. தூரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு மூன்று நடைகூட இயக்கப்படலாம். அதன்படி பார்த்தால், அரசுத் தரப்பில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதனால், தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, தனியார் ஆம்னி பேருந்துகள்தான்.
தமிழ்நாடு முழுக்க, அனுமதி பெற்ற ஆம்னி பேருந்துகள் சுமார் 2,800-க்கும் அதிகமாக இருந்தாலும், வழக்கமான நாள்களில் சுமார் 40% பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறைக் காலங்களில் மட்டும்தான் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும். அந்தச் சமயத்தில், பொதுமக்களிடமிருந்து எவ்வளவு பிழிய முடியுமோ, அவ்வளவு தூரம் பிழிந்துவிடுகிறார்கள். ‘ஓர் உரிமையாளர் 15 பேருந்துகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது, அரசுப் பேருந்துகளைப் போல வழித்தடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மீறக் கூடாது’ எனப் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்துக் கொள்வதில்லை. சந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆம்னி பேருந்துகளில், சுமார் 60 சதவிகிதப் பேருந்துகள் அரசியல்வாதிகளால் நேரடியாகவோ, பினாமிகளைவைத்தோ இயக்கப்படுபவை. எஞ்சியவற்றில் பெரும்பாலானவை பெரும் நிறுவனங்களால் இயக்கப்படுபவை. பிறகு எப்படி இவர்களைச் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும்... அதனால்தான், கட்டணக் கொள்ளை தைரியமாக நடக்கிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ரயில்களும், அரசுப் பேருந்துகளும் போதவில்லை என்ற சூழ்நிலையில்தான் திருவிழாக் காலங்களில் மக்கள் ஆம்னி பேருந்துகளை அதிகம் நாட வேண்டியிருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இஷ்டத்துக்குப் பணம் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அரசுப் பேருந்துகள் என்ன கட்டணம் வசூலிக்கின்றனவோ, அதே கட்டணத்தை ஆம்னி பேருந்துகளும் வசூலிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகள் தனிக்கட்டணம் வசூலிக்க அரசு அனுமதிக்கக் கூடாது. அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைக்கூட அவர்கள் பின்பற்றுவதில்லை. அதைவிடக் கூடுதலாக வசூலிக்கிறார்கள். இந்தப் போக்கை அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறுகையில், “ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது பெரும் மக்கள் பிரச்னையாக இருக்கிறது. அதற்கு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதே முக்கியக் காரணம். நிர்வாகத்திறமை என்பது இந்த அரசுக்கு வார்த்தையில்கூட இல்லை. தீபாவளி சமயத்தில் டாஸ்மாக் வருமானத்தை நிர்ணயித்து, அதில் வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டும் இந்த விடியாத அரசு, இது போன்ற மக்கள் பிரச்னையில் அமைதியாக இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு” என்றார்.
பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அன்பழகனிடம் விளக்கம் கேட்டோம். “தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 25,000 பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய இரவு, பகலாகப் பாடுபடுகிறோம். எங்களைக் கொள்ளையர்கள் என்று சொல்வது நியாயமா... `கொள்ளை’ எனக் கேட்கும்போது மனது வலிக்கிறது. அரசுப் பேருந்துகளுக்கு டீசல், உதிரி பாகங்கள் வரை மானியம் கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது. ஒவ்வொரு வருடமும் வரியாக மட்டுமே எட்டு லட்சம் ரூபாய் வரை செலுத்துகிறோம். டீசல் தொடங்கி சம்பளம் வரை மற்ற செலவுகளும் இருக்கின்றன. இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் குறைந்த - அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம்.
வருடத்தில் பத்து தினங்களுக்கு மட்டுமே அதிகபட்ச கட்டணம் என்ற பேச்சு வருகிறது. மற்ற தினங்களில் அரசுப் பேருந்துகளைவிட மிகக் குறைந்த விலையில்தான் நாங்கள் பேருந்துகளை இயக்குகிறோம். அரசுப் பேருந்து தவிர, ரயில், விமானம், டாக்ஸி போன்ற எல்லா வகையான பொதுப் போக்குவரத்து களிலும் Dynamic Fare System Software மூலமாகவே செயல்படுகிறது. அதாவது தேவைகள் குறைவாக இருக்கும்போது, கட்டணம் குறைவாகவும், தேவைகள் அதிகரிக்கும்போது கட்டணம் அதிகமாகவும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம்கூட தானியங்கி மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப் படுகிறது. திடீரென தக்காளி கிலோ 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் விலை உயரும்போது விமர்சனம் செய்யும் மக்கள், கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்போது அதை விற்பனை செய்த விவசாயியை நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதே நிலைதான் எங்களுக்கும்” என்றார்.
இறுதியாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் பேசினோம். “ஆம்னி பேருந்துகள், பயணிகளைக் குழுவாக அழைத்துச் செல்லும் ஒப்பந்த வாகன வகையைச் சேர்ந்தவை. அதில், பயணிகளை ஏற்றிக் கட்டணம் வசூல் செய்ய எந்த அனுமதியும் கிடையாது. சட்டத் திருத்தம் செய்தால் கட்டண விவகாரம் தாண்டி, ஆம்னி பேருந்துகளும் ஸ்டேஜ் கேரியர் பேருந்துகளைப்போலச் செல்ல அனுமதி கேட்பார்கள். இதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அரசுப் போக்குவரத்துத்துறை சார்பில் அதிக பேருந்துகளை இயக்க முடிவு செய்திருக்கிறோம். அதேசமயத்தில், இந்த முறை கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பதை அரசு சார்பிலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டில் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. அதேபோல, இந்த ஆண்டும் பிரச்னை ஏற்படாதவாறு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது” என்றார்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், ஆம்னி பேருந்துக் கட்டணக் கொள்ளையால் சர்ச்சைகள் வெடிப்பதும், பொதுமக்கள் கோபக்குரல் எழுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த முறை, பிரச்னையை முடிப்பதாக நினைத்து, கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி, புதுப் பிரச்னையை உருவாக்கிவிட்டது அரசு. கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கூறியதைப்போல, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தையேதான் அவர்கள் வசூலிப்பார்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அரசு கடிவாளம் போடவில்லை யென்றால், இந்தக் கட்டண உயர்விலும் கொள்ளையிலும் விடிவே கிடைக்காமல் பலியாகப்போவது பொதுமக்கள்தான்!
Comments 0