1999-ல் உலகக்கோப்பையின் விளம்பரப்பாடல் வெளியாகும் முன்பே நாங்கள் உலகக்கோப்பையை விட்டு வெளியேறி விட்டோம்’’ என்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹூசைன். இந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அவ்வளவு வேகமாகத்தான் வெளியேறியிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், விளம்பரப்பாடல் மட்டும் முன்கூட்டியே வெளியாகிவிட்டது. இங்கிலாந்துடன் போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தான் ஒரு பக்கம் சரிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தங்களின் பழைய பாய்ச்சலுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஏதோ ஒரு போட்டியை வென்றுவிட்டார்கள் என நம்பப்பட்ட ஆப்கானிஸ்தானும் நெதர்லாந்தும் அந்த துச்சமான கணிப்பைப் பொய்யாக்கியுள்ளன. அத்தனை பேர் மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி, அரையிறுதிக்குச் செல்லப்போகும் அந்த நான்கு அணிகள் எவை? குறிப்பாக அந்த நான்காவது இடத்தைப் பிடிக்கப்போகிற அணி எது என்பதே.